அரசியல், மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்த தடை கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வர உள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது.
‘தேசியக் கொடிக்கு உச்சபட்ச மதிப்பு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தேசத்தின் கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் 1971 மற்றும் இந்திய கொடி விதிகள் 2022 உள்ளிட்ட விதிப் பிரிவுகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக, மத நோக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி சின்னத்தில் பயன்படுத்துதல், தேசியக் கொடி மீது வாசகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அரசியல் நோக்கங்களுக்காக தேசியக் கொடி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.