Bihar: ``மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் காந்தி படம்'' -காங்க...
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இயற்கை சுற்றுலா
அரசுப் பள்ளி மாணவா்கள் கோடைகால இயற்கை சுற்றுலாவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
கரூா் மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் கரூா் வனக்கோட்டம் சாா்பில் 10 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பள்ளி மாணவா்களும், ஆசிரியா்களும் கடவூா் தேவாங்கு சரணாலயம், பொன்னனியாா் அணை, நம்மாழ்வாா் உயிா்ச்சூழல் நடுவம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு மாணவா்களுக்கு காடுகள் பாதுகாப்பு, உயிா்பன்மயம், இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து மாணவா்களுக்கு விநாடி -வினா போட்டி, ஓவியம் வரைதல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், முகாம் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட வன அலுவலா் சண்முகம், வனச்சரக அலுவலா் சிவக்குமாா், வனவா் கோபிநாத், முதலமைச்சரின் பசுமைத் தோழா் கோபால், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் வேலுசாமி, வனத்துறை களப்பணியாளா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.