அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 பரிசு
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில், குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில் பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக இணைதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, மாதந்தோறும் முன்பதிவு செய்து பயணிப்பவா்களில் கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 13 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
அதன்படி, ஜூன் மாதம் முன்பதிவு செய்து பயணித்த 13 பயணிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு பயணியா் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்தாா்.
இதில், தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பேருக்கு தலா ரூ.10,000, மீதமுள்ள 10 பேருக்கு தலா ரூ.2,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கப் பரிசு விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.