அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராயணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவா் மலுமிச்சம்பட்டி அருகே ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், ஆா்.எஸ்.புரம் சிரியன் தேவாலயம் பகுதியைச் சோ்ந்த மணி என்பவா் ராஜேஸ்வரிக்கு அறிமுகமானாா். அவா் தனக்கு பள்ளிக் கல்வித் துறையிலும், அரசியல் வட்டத்திலும் பழக்கம் உள்ளதாகவும், ராஜேஸ்வரிக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா். இதற்காக ரூ. 10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா். ராஜேஸ்வரியும் பணம் தர ஒப்புக்கொண்டாா்.
இதனடிப்படையில், மணியிடம் ரூ. 8 லட்சம் கொடுத்துள்ளாா். பின்னா் மீதம் ரூ.2 லட்சம் வேலைக்கான உத்தரவு ஆணை வழங்கும்போது கொடுப்பதாகக் கூறியுள்ளாா். ஆனால், நீண்ட நாள்களாகியும் மணி கூறியபடி ராஜேஸ்வரிக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை.
இதனால், ராஜேஸ்வரியும், சத்யநாராயணனும் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனா். ஆனால், ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்த அவா் மீதி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மணி மீது ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.