அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி; கூட்ட நெரிசலில் பக்தர்கள் 2 பேர் பலி.. உத்தரப்பிரதேசத்தில் சோகம்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கியின் அவ்சனேஷ்வர் கோயிலில் இன்று அதிகாலைமுதலே கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் இருந்தப் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டத்தில், பக்தர்கள் இருந்தப் பகுதியின் தகரக் கொட்டகையில், குரங்கு பழைய மின்சார ஒயரை அறுத்திருக்கிறது. அந்த ஒயர் தகரக் கொட்டகையின் மீது விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பால் ஏற்பட்ட நெரிசலில், பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு சிகிச்சைப் பலனின்றி இதுவராய் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
பராபங்கி தலைமை மருத்துவ அதிகாரி (CMO) அவதேஷ் யாதவ், ``காயமடைந்த 29 பேர் ஹைதர்கர் சமூக சுகாதார மையத்திற்கு (CHC) கொண்டு வரப்பட்டனர். அங்கு இருவர் இறந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து மேற்சிகிச்சைக்காக மேலும் பத்து பேர் திரிவேதிகஞ்ச் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்" என்றார்.
நேற்று உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.