காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
அழகன்குளத்தில் அருங்காட்சியகம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வின் போது கண்டறியப்பட்ட பொருள்களை அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த அசோகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வின் போது தொன்மையான சங்க காலத்து பானை ஓடுகள் கிடைத்தன. இவை அனைத்தும் சுமாா் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் என ‘காா்பன் டேட்டிங்’ ஆய்வு மூலம் தெரிய வந்தது.
மேலும், அழகன்குளம் அகழாய்வில் ரோமானியா்கள் குடியிருப்பு, சீன மண்பாண்டங்கள் உள்பட பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டன. 33 ஆண்டுகளாக அழகன்குளம் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரிய பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, அழகன்குளம் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீநிதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை குறித்து மாநில தொல்லியல் துறையினா் 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.