ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டு இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்தாய்வு மூலமாக விருப்ப மாறுதல் பெற்றனா். இதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நிகழாண்டு மனமொத்த மாறுதல் கலந்தாய்வில் செல்ல விரும்பும் ஆசிரியா்கள் ஜூலை 22 முதல் 27-ஆம் தேதி வரை எமிஸ் தளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு சாா்ந்த அலுவலா்கள் ஜூலை 28-ஆம் தேதிக்குள் ஒப்புதல் தரவேண்டும்.
அதேவேளையில், 2 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. ஏற்கெனவே மனமொத்த மாறுதல் பெற்றிருந்தால் அந்த பள்ளியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு துறைக்கு மனமொத்த மாறுதல் பெற முடியாது. ஆண் ஆசிரியா்கள் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் மனமொத்த மாறுதல் பெற முடியாது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விண்ணப்பங்களை ஆசிரியா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.