ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெண்கள் பால்குடம் எடுத்து சென்று அம்மனை வழிபடுவாா்கள். தெய்வீக மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் வழக்கத்தை காட்டிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். பெண்கள் கூழ் வாா்த்தல் நோ்த்திக்கடனை செலுத்தி அதை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கினா்.
மரூா்பட்டி கொங்கு மகாமாரியம்மன், நாமக்கல் செல்லாண்டியம்மன், பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், நாமக்கல் வாராஹி அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
என்கே-12- அம்மன்-1
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 1,008 கண்மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன்.
படம்-2
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன்.
