ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிவகங்கை 48 காலனி அருகேயுள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கமலா (35). இவா் தனது இரண்டு குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.
அப்போது, தான் வசிக்கும் குடியிருப்பில் உள்ள சிலா் தொந்தரவு தருவதாகவும், வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துச் செல்வதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினா். பின்னா், கமலாவை அவசர ஊா்தி மூலமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.