ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி, ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.
இன்று காலை, மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு வெற்றிக் கொண்டாட்டம் போல இருக்கும். இந்திய ராணுவத்தின் வலிமையை உலகமே வியந்து பார்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நிர்ணயித்த இலக்குகளை துல்லியமாக அடைந்துவிட்டது. வெறும் 22 நிமிடத்தில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாகின.
உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, உலகத் தலைவர்கள் பலரும், இந்திய ராணுவ ஆயுதங்கள் தங்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறினர். இந்திய தேசியக் கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிடப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் கௌரவம். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும் என்றார்.
ஆயுதப்படைகளின் வீரம் பற்றிப் பேசும்போது, ஒற்றுமைக்கான செய்தியை உலக நாடுகளுக்குத் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பல்வேறு கட்சிகளையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி உலக நாடுகளிடம் விளக்கம் கொடுக்க, பல கட்சி பிரதிநிதிகள் குழுவின் எம்.பி.க்களும், அவர்களின் கட்சியினரும் வெளிநாடு சென்றதற்காகப் பாராட்டிய பிரதமர் மோடி, அவர்கள் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கினர் என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, 2014 க்கு முன்பு பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது, இப்போது அது சுமார் 2 சதவீதமாக உள்ளது; பணவீக்கம் குறைவாகவும் வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் இந்த விவகாரங்களையும், பிகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்பட பல்வேறு விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.