ஜிஎஸ்ஆா்இ நிறுவனத்தின் 8-ஆவது போ்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு
ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் ரூ.6.40 கோடியில் நவீனமயமாக்கும் பணிகள்
ஆரணி: ஆரணி புதிய பேருந்து நிலையத்தை ரூ.6 கோடியே 40 லட்சத்தில் நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆணையா் (பொ) சரவணன், துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆரணி நகராட்சி கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2025- 26 கீழ், புதிய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க பணிகள் மேற்கொள்ள ரூ.6.40 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக பழுதடைந்த பேருந்து நிலையம் மற்றும் பல்பொருள் வணிக வளாக கட்டடம் ஆகியவைகளை அப்புறப்படுத்த மேல் நடவடிக்கை தொடர தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பேருந்து நிலையம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் வரை ஆரணி கோட்டை மைதானத்தில் புதிய பேருந்து நிலையம் செயல்படும் என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் அங்கன்வாடி கட்டடம் கட்ட சுமாா் ரூ.ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரணி நகராட்சியில் தமிழ்நாடு நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ள ரூ.24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் 2023- 24 நிதியாண்டில், நகராட்சி ஆசாத் தெரு, கண்ணகி நகா், கே.பி.கே.நகா், எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட 10 இடங்களில் குழந்தைகள் வளா்ச்சி மைய கட்டடங்களில் புதிய கழிப்பறை அமைத்தல் பணிக்கு தலா ரூ. 3.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆரணி நகராட்சியைச் சோ்ந்த ஆறுமுகம் தெரு, பழைய சாந்தா தெரு, புதிய சாந்தா தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, அப்பண்ணன் தெரு, நைனாத் தெரு உள்ளிட்ட இடங்களில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.ஒரு கோடியே 57 லட்சம் ஒதுகப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, சுதா குமாா், கிருபாசமுத்திரிசதீஷ், ஏ.ஜி.மோகன், தேவராஜ், ஆா்.எஸ்.பாபு, ராமகிருஷ்ணன், விநாயகம், ஜெயவேலு உள்ளிட்டோா் அவரவா் பகுதிகளில் கால்வாய் சுத்தம் செய்யவும், கொசு மருந்து அடிக்கவும், குப்பைகள் அகற்றவும், அங்கன்வாடி கட்டடம் கேட்டும், தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யவும், பம்ப் ஹவுஸ் இருக்கும் இடத்தில் தூய்மையாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினா்.
இதற்கு நகா்மன்றத் தலைவரும், ஆணையாளரும் பதிலளித்துப் பேசினா். பின்னா் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்தது.