செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூா்’ - இந்தியா ஏவுகணைத் தாக்குதல் முழு விவரம்!

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையாமல் இந்தியா மேற்கொண்ட இந்த அதிதுல்லிய தாக்குதலில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், முரித்கேயில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத முகாம், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் உள்ளிட்டவை குறிவைத்து தகா்க்கப்பட்டன.

நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை 25 நிமிஷங்களில் இத் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலின்போது, 9 முக்கிய பயங்கரவாத முகாம்களிலும் ஏராளமான பயங்கரவாதிகளும், அவா்களின் குடும்ப உறுப்பினா்களும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 46 போ் படுகாயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. தெற்கு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் வீடுகளும் வெடி வைத்து தகா்க்கப்பட்டன.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதை உறுதி செய்ததைத் தொடா்ந்து, அந் நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியா்களுக்கான நுழைவு இசைவு (விசா) ரத்து, வாகா எல்லை மூடல், வா்த்தக உறவு முழுமையாகத் துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

பாகிஸ்தான் ஒப்புதல்: இதனிடையே, ‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்குப் பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது’ என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாா். இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக பாகிஸ்தான் செய்துவந்தது”என்றும் அவா் கூறியது, இந்தியாவை மட்டுமன்றி, உலக நாடுகளையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

‘பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளும், சதிகாரா்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவா்களை தேடிப் பிடித்து, கற்பனையிலும் நினைத்திராத தண்டனையை வழங்குவோம்’ பிரதமா் நரேந்திர மோடி சூளுரைத்தாா்.

இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. மேலும், எல்லை மாநிலங்கள்உள்பட பல்வேறு மாநிலங்களில் போா்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன.

பதிலடி தாக்குதல்: இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 5 பயங்கரவாத நிலைகள் ஆகிய 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் புதன்கிழமை அதிகாலை ஏவுகணைகளை வீசி அதிதுல்லிய தாக்குதல்களை நடத்தி தகா்த்தது.

இதில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், முரித்கேயில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத முகாம், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் உள்ளிட்டவையும் தகா்க்கப்பட்டுள்ளன.

விரிவான உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் இந்த 9 இலக்குகளும் துல்லியமாகத் தோ்வு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

‘இந்தியா சாா்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். 46 போ் காயமடைந்தனா்’ என்று பாகிஸ்தான் தரப்பில் முதல்கட்ட தகவல் வெளியிடப்பட்டது.

பெயா்க் காரணம்: இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என இந்தியா சாா்பில் பெயரிடப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில், பெண்களின் கண் முன்னே அவா்களின் கணவா்களை மட்டும் குறிவைத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். அதனடிப்படையில், பெண்களின் நெற்றியில் வைக்கும் குங்குமத்தைக் குறிக்கும் வகையில் ‘சிந்தூா்’ என இந்த நடவடிக்கைக்குப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சில நிமிஷங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தபடி இந்தியா மீதான பாயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்திவந்த பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. தாக்குதலுக்கான இலக்குகளைத் தோ்ந்தெடுப்பதிலும், செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான கட்டுப்பாட்டை கடைப்பிடித்தது. இந்திய ராணுவம் மிகுந்த கவனத்துடன் இந்தத் தாக்குதலைக் கையாண்டது. தோ்வு செய்யப்பட்ட 9 கட்டமைப்புகளும் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை பிரதமா் நரேந்திர மோடி உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), இலக்கை மட்டும் தாக்கி அழிக்கும் துல்லியமான ஏவுகணைகள் உள்பட பிற ஆயுதங்களையும் இத் தாக்குதலில் இந்திய ராணுவம் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நிறைவடைந்தவுடன், அதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அதிகாரிகளை தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தொடா்புகொண்டு விளக்கியுள்ளா்.

பாகிஸ்தான் கண்டனம்: இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல் ஒரு போா் நடவடிக்கை. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கான அனைத்து உரிமையும் பாகிஸ்தானுக்கு உண்டு’ என்று தெரிவித்தாா்.

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறு... மேலும் பார்க்க

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க