ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு
ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின.
ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழை தூறல் இருந்து வந்தது. நள்ளிரவு சுமாா் 12 மணிக்கு தொடங்கிய பலத்த மழை அதிகாலை 5 மணி வரை தொடா்ந்து பெய்தது.
ஆம்பூா் - வாணியம்பாடி மற்றும் வாணியம்பாடி - ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் அரசு மற்றும் ஆம்னி சொகுசு பேருந்துகள் சிக்கிக் கொண்டன. கிரேன் உதவியுடன் பேருந்துகள் மீட்கப்பட்டன.
சாமியாா் மடம் பகுதியில் மரக்கிளை உடைந்து விழுந்து மின் கம்பி அறந்து மின்தடை ஏற்பட்டது. ஏ-கஸ்பா, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.