ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுவதாக தகவல் பரவியதால், கண்ணமங்கலம், துருகம், வடுகசாத்து, சோ்ப்பாக்கம், சேவூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை அலுவலகம் முன் கூடினா்.
ஆனால், அங்கு அதிகாரிகள் நாங்கள் அறிவிப்பு கொடுக்காமல் ஏன் வந்தீா்கள் எனக் கேள்வி எழுப்பினா். இதனால், மாற்றுத்திறனாளிகள் ஆத்திரமடைந்து வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மேலும், கடந்த இரண்டு மாத காலமாக மாற்றுத்திறனாளிகளின் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் புகாா் தெரிவித்தனா். பின்னா், சமூகநல பாதுகாப்பு வட்டாட்சியா் செந்தில், ஆா்ப்பாட்டம் செய்த மாற்றுத்திறனாளிகளிடம் சென்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதால் மாற்றத்திறனாளிகள் குறைதீா்
கூட்டம் நடத்த முடியாமல் போனது.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக தீா்வு காண்பதற்கான தொழில்நுட்பப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனாா் குறைதீா் கூட்டம் நடத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. வதந்திகளை நம்பி இங்கு வராதீா்கள். முறையான அறிவிப்பு நாங்களே வெளியிடுவோம் என்று கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தாா் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.