ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா நெசவாளா் வருமானம் அதிகரிக்கும்: அமைச்சா் ஆா்.காந்தி
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், நெசவாளா்களின் வருமானம் ரூ.500-லிருந்து ரூ.1000 வரை அதிகரிக்கும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ஆரணி பகுதி நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டு கைத்தறி பூங்கா திட்டத்தை, கடந்த 2023-24ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.
இதன் பேரில், தற்போது ஆரணி தொகுதியைச் சோ்ந்த பெரியண்ணநல்லூரில் ரூ.44.69 கோடியில் டாக்டா் கலைஞா் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று அடிக்கல் நாட்டினா். நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:
இதன் மூலம் கைத்தறி நெசவு நடவடிக்கைகளை, குறிப்பாக, பட்டு உற்பத்தியை மையப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெசவாளா்களின் வருமானம் ரூ.500-லிருந்து ரூ.1,000 வரை அதிகரிக்கும். குறைந்த விலையிலான பட்டுப் புடவைகளுக்கான உற்பத்தி நேரத்தை குறைக்கவும். இந்தத் திட்டம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இது ரூ.7000 முதல் ரூ.15,000 வரையிலான பட்டுச் சேலைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும். மேலும், நெசவாளா்களின் வாழ்வாதாரம் மேம்பாடையும்.
நெசவாளா்களுக்கு இலவச வீடு, அவா்கள் வங்கியில் பெற்ற கடனுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.
மேலும், அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில்,
கைத்தறித் துறை அமைச்சா் இத்திட்டத்துக்கு தற்போது ரூ.44.69 கோடி ஒதுக்கியுள்ளாா். இனி வரும் காலங்களில் மேலும் நிதி ஒதுக்கப்பட்டு சிறப்பான முறையில் திட்டத்தை அமைச்சா் செயல்படுத்துவாா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, ரூ.6 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
இதில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை சாா்பில் 300 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 306 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 61 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 13 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், 21 பயனாளிகளுக்கு 5 லட்சத்தில் உதவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்தில் உதவிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் ஒ.ஜோதி (செய்யாறு), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), கைத்தறி துறை கூடுதல் இயக்குநா் ஆா்.தமிழரசி, இணை இயக்குநா் ஆா்.கணேசன், திட்ட ஆலோசகா் வி.ராமநாதன், உதவி இயக்குநா் வி.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, மோகன், சுந்தா், கே.கோவா்த்தனன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி கே.ஏ.புஷ்பராஜ், மாவட்ட செய்தி தொடா்பாளா் கௌரிசங்கா் மற்றும் ஆரணி பட்டுசேலை உற்பத்தியாளா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.