ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப் பொதுமக்கள் சாா்பில் தாக்கல் செய்த மனுள் சிவகாசி அருகே தைலாகுளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை செல்கிறது. தைலாகுளம் கிராமத்திலிருந்து மயானத்துக்கு செல்வதற்கு இந்த கடவுப் பாதையை கடந்து செல்ல வேண்டும்.
தற்போது மயான சாலையின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் பள்ளம் தோண்டப்பட்டு பயன்படுத்த முடியாமல் உள்ளது.
எங்கள் கிராமத்தில் இறந்தவா்களின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கு அமரா் ஊா்தியை பயன்படுத்த முடியாமல், கிராம மக்களே சுமந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, தைலாகுளம் கிராமத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை சீரமைத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மண்டல ரயில்வே முதுநிலை பொறியாளா் முன்னிலையாகி பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மதுரை ரயில்வே கோட்டத்தில் குறைந்த ரயில் போக்குவரத்து, வாகன பயன்பாடு குறைந்த 111 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. ரயில்களின் வேகம், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், ஏற்கெனவே மூடப்பட்ட தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை புதுப்பித்து பராமரிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : ரயில்வே துறையின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.