ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார்.
அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கைக் காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஆவடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தன்னுடைய பைக்கைக் காணவில்லை என புகாரளித்தார்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அந்தப் பெண்ணின் டூவிலரைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்தப் பைக்கை பெண்ணிடம் ஒப்படைக்க ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், ஆவடி குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர் ஹரிதாஸ் என்பவர், புகார் கொடுத்த இளம்பெண்ணை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது காவலர் ஹரிதாஸ், உங்களின் பைக்கை கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கிறோம். அதனால் எங்களை கவனியுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்தப் பெண், கவனிப்பு என்றால் என்ன கேட்டிருக்கிறார். உடனே காவலர் ஹரிதாஸ், 15 கே கொடுங்கள் போதும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண், அவ்வளவு கே என்னிடம் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து காவலர் ஹரிதாஸ் அந்தப் பெண்ணிடம் பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணை ஆவடியில் உள்ள விடுதிக்கு வரும்படி காவலர் ஹரிதாஸ் கூறியதாக தெரிகிறது.
காவலரின் அநாகரிகமற்ற பேச்சால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக தன்னுடைய சகோதரனிடம் விவரத்தை கூறியிருக்கிறார். அதனால் காவலர் ஹரிதாஸை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட பெண்ணின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்றிருக்கிறார்கள்.
அங்கு காத்திருந்த காவலர் ஹரிதாஸிடம் பெண்ணின் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதனால் விடுதி நிர்வாகம், ஆவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. அதன்பேரில் அங்கு வந்த போலீஸாரிடம், காவலர் ஹரிதாஸ் என்ன செய்தார் என்பதை விவரமாக கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து பெண்ணின் தரப்பில் ஆவடி உதவி கமிஷனர் கனகராஜிடம் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி கமிஷனர் கனகராஜ், காவலர் ஹரிதாஸிடம் விசாரித்தார். பின்னர் விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், புகார் கொடுத்த பெண் கொடுத்த தகவல் அடிப்படையில் காவலர் ஹரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தில் உதவி கமிஷனர் கனகராஜ் அளித்த ரிப்போர்ட் அடிப்படையில் காவலர் ஹரிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து டூவிலர் திருட்டு தொடர்பாக பெண்ணிடம் லஞ்சம் கேட்டதில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது எனவும் விரிவாக விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டிருக்கிறார்.
காவலரை சிக்க வைத்த சிசிடிவி, வீடியோ காட்சிகள்
இதுகுறித்து ஆவடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காவலர் ஹரிதாஸின் உள்நோக்கத்தை தெரிந்துக் கொண்ட பெண்ணின் குடும்பத்தினர், திட்டமிட்டப்படி அவரை விடுதிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதன்பிறகு பெண்ணை பின்தொடர்ந்தப்படி அதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்கள். விடுதிக்குள் அந்தப் பெண் சென்றதும் சந்தோஷமாக அவரை வரவேற்ற காவலர் ஹரிதாஸ், உள்ளே செல்வதற்குள் பெண்ணின் குடும்பத்தினர் அங்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இவை அனைத்தும் வீடியோ பதிவு உள்ளது. அதன்அடிப்படையில்தான் காவலர் ஹரிதாஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார்.