ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!
ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில், யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, அந்நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் அமைந்திருந்த யூதர்களின் கோயில் மற்றும் உணவகம் ஆகியவற்றின் மீது தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்தச் சம்பவங்களை, ஈரான் அரசுதான் இயக்கியது என்பதற்கான ஆதாரங்களை, தங்களது புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அல்பானீஸ் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அனைத்து ராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்தார். மேலும், அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரானின் தூதர் அஹமது சடேகி, ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (ஆக.28) வெளியேறியதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் எந்தவொரு ஈரானிய அதிகாரிகளும் ஈடுபடவில்லை என அந்நாட்டின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் மைக் பர்கெஸ் கூறியுள்ளார்.
இருப்பினும், மைக் பர்கஸின் தகவலுக்கும் பிரதமர் அல்பானீஸின் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவொரு ஆதாரங்களும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!