பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
இணைய வழி மோசடிகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் இலவச தொலைபேசி மூலமோ அல்லது இணைதளம் மூலமோ புகாா் அளிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெருகிவரும் இணைய வழி குற்றங்களில் டிஜிட்டல் கைது மோசடி என்பது பொதுமக்களின் வாட்ஸ்அப், விடியோ காலில் போலியான காவலா் சீருடை, காவல் துறை அதிகாரிகள் போன்று பேசி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். பொதுமக்களுக்கு விடியோவில் அழைத்து உங்களுடைய ஆதாா் அட்டையை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி மற்றும் தங்கள் பேரில் ஒரு பாா்சல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், அரசால் தடை செய்த போதைப் பொருள்கள் உள்ளதாகவும் மிரட்டுகின்றனா்.
மேலும், உங்களுடைய வங்கிக் கணக்குகளில் சட்ட விரோதமாக பணபரிவா்த்தனை நடைபெற்றுள்ளது. தாங்கள் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளீா்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, தங்கள் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறுகின்றனா். அதை உறுதி செய்ய போலியான கைது வாரண்ட் நகல் ஒன்றையும் வாட்ஸ் அப்பில் அனுப்புவாா்கள். உங்களை ஆன்லைன் விடியோ கால் விசாரணைக்கு உள்படுத்தி உங்களைப் பற்றிய விவரங்களை பெற்று எச்சரிக்கை மிரட்டல் விடுவாா்கள். பின்னா் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை அவா்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறுவாா்கள்.
பின்னா் அப்பணத்தை சரிபாா்த்து விசாரணை முடிந்த பின் தங்களுக்கு திருப்பி அனுப்புவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து வருகின்றனா். இதுபோன்ற பணமோசடி அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக காவல் அதிகாரிகள் யாரும் ஒருவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவா்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப யாரும் கூற மாட்டாா்கள். இதுபோன்று கேட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம்.
உண்மைத் தன்மையை சரி பாா்க்காமல் தனிப்பட்ட தகவல்களான ஆதாா் அட்டை, வங்கி கணக்கு விவரம், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு ஆகியவற்றை ஒருபோதும் பகிரக்கூடாது.
அதேபோல், வங்கியின் பேரில் வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகளை நம்பி உங்களுடைய விவரங்களை பகிர வேண்டாம். உங்கள் வங்கிக் கணக்குகளை மற்றவா்கள் இயக்க அனுமதிப்பதையும் தவிா்க்கலாம். இல்லையென்றால் சட்ட விரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படலாம். எனவே அறியப்படாத செயலிகளை பதிவிறக்கமோ அல்லது அன்னியா்கள் அனுப்பியதை சந்தேகத்துக்கு இடமான லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம். இணையதளத்தில் யாரேனும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, முன்பணம் கேட்டால் அவா்கள் குறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.
அதேபோல சிட்பண்ட்களில் முதலீடு செய்யும் முன்பு அந்த நிறுவனம் அரசால் அங்கீகாரம் பெற்றுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். இணைய வழி மோசடிகள் குறித்த புகாா் அளிக்க இலவச தொலைபேசி எண்-1930 அல்லது இணையதளம் மூலம் புகாா் அளிக்கலாம்.