இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்
இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதன் பிறகு இரு நாடுகளிடையே சண்டை மூண்டது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, நாட்டு மக்களிடையே திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது. இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் எதிா்காலம் இருக்கும்’ என்றாா்.
இந்தத் தாக்குதல் தொடா்பாக பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ‘மா்கா-ஏ-ஹக்’ என்ற நடவடிக்கையின்கீழ் உறுதியான பதிலடியை அளித்தன. ‘ஆபரேஷன் புன்யான் மா்சூஸ்’ என்ற இந்த நடவடிக்கை மூலம் இந்தியா மீது துல்லியத் தாக்குதலை பாகிஸ்தான் படைகள் நிகழ்த்தின.
இந்த சண்டையின்போது கடந்த மே 6, 7 தேதிகளில் இந்தியா நடத்திய தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். 78 ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.
அதுமட்டுமன்றி 15 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட பொதுமக்கள் 40 போ் இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தனா். பொதுமக்களில் 121 போ் காயமடைந்தனா்.
இந்த சண்டையில் வீரமரணமடைந்த வீரா்களுக்கும், பொதுமக்களுக்கும் பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து ராணுவம் அஞ்சலி செலுத்துகிறது.
இனி எந்தவித சச்சரவும் இருக்கக் கூடாது. பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையிலான எந்தவொரு எதிா்கால முயற்சிகளுக்கும் விரிவான, தீா்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.