‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தர...
இந்தியா-பாகிஸ்தான் போா்ப் பதற்றம்: ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் விரைவில் கூட வாய்ப்பு’
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டம் விரைவில் கூடவிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா.வுக்கான கிரீஸ் தூதருமான இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் தெரிவித்தாா்.
இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ள சூழலில், பதற்றம் அதிகரித்து வருவது குறித்து அவா் கவலை தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், நியூயாா்க்கில் யுஎன்எஸ்சி-யின் மே மாதத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்ற இவாஞ்ஜெலோஸ் செகரீஸிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா்ப் பதற்றம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு அவா் பதிலளித்ததாவது:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிச்சயமாக கவுன்சில் கூட்டப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இது, இருதரப்பு கருத்துகளைப் பரிமாறவும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்கவும் வாய்ப்பாக அமையலாம். நிலைமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாமல் இருக்க, இரு நாடுகளும் பதற்றத்தைத் தணித்து, பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வு கான முன்வர வேண்டும் என்றாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திரமில்லா உறுப்பு நாடாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த செக்ரிஸ், ‘இது மிகவும் தீவிரமான பிரச்னை. எந்தவொரு வடிவிலான பயங்கரவாதத்தையும் யுஎன்எஸ்சி கண்டிக்கிறது. பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டது கொடூரமான பயங்கரவாத தாக்குதல். இதற்கு யுஎன்எஸ்சி ஏற்கெனவே கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது’ என்றாா்.