இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்த ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய அணி மிஸ் செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை மிஸ் செய்யப் போகிறது என நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் இருவருமே போட்டியை வென்று கொடுப்பவர்கள். அவர்கள் இருவரும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். தற்போது இந்திய அணி நன்றாக இருக்கிறது. ஆனால், ரோஹித் மற்றும் கோலி இருந்தபோது அணி இன்னும் வலிமையாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களாக அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால், அவர்கள் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.
மூத்த வீரர்கள் இல்லாமல் அணி மெதுவாக மாற்றம் அடைந்து வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான காலக்கட்டமாகும். போட்டியை வென்று கொடுக்கும் பேட்டர்களை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும். தற்போதுள்ள இந்திய அணியில் ரிஷப் பந்த் மட்டுமே போட்டியை வென்று கொடுப்பவராக இருக்கிறார். அதனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இல்லாது பெரிய இழப்பாகும் என்றார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதும், அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Former England wicketkeeper Roland Butcher has said that Rishabh Pant is the only one who can win matches for the Indian team.
இதையும் படிக்க: பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்