13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?
`இந்த நாலு பேரையும் நிக்க வச்சு கேள்வி கேக்கணும்' - உயரதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டும் DSP
மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், `டி.எஸ்.பி சுந்தரேசனிடமிருந்து வாகனம் பறிக்கப்படவில்லை' என செய்தியாளர்களிடம் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.எஸ்.பி சுந்தரேசன், ``காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சியில் கஸ்தூரி என்பவருடைய மரணத்தில் காவல்துறையின் சித்திரவதை இருக்கிறது. இதில் பல உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்ற விசாரணை ஆய்வு முடிவை, மாநில மனித உரிமைகள் ஆணையரும், கேரள உயர் நீதிமன்ற நீதிபதியுமான மணிக்குமார் என்பவரிடம் ஒப்படைத்தேன். அவர் அதை மாநில அரசுக்கு அனுப்பினார்.
அதற்குப் பிறகு உடனடியாக என்னை அந்த ஊரில் இருந்து பணி மாற்று செய்தார்கள். இதற்கு நீதிபதி மணிக்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், ஒரு மாத காலம் அங்கு தொடர்ந்து வேலை செய்தேன். அதற்குப் பிறகும் நீதிபதி மணிக்குமாருக்கு நெருக்கடி கொடுத்ததின் அடிப்படையில், என்னை மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க துறைக்கு மாற்றினார்கள்.
ஒன்பது மாத கால என் பணியில், 1200 வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம். 700 நபர்களை கைது செய்திருக்கிறோம். கஞ்சா வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள் போன்ற அனைத்து மாநில அரசின் உத்தரவுகளையும், எஸ்.பி ஸ்டாலின் உள்ளிட்ட பலரின் உத்தரவுகளையும் மிகச் சரியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு இடையில் எனக்கு பல்வேறு மெமோக்கள் வந்து கொண்டு இருந்தது. எனக்கு மேல் இருக்கக்கூடிய அதிகாரி மாவட்ட கண்காணிப்பாளர் என்னிடமிருந்து வாகனமே பறிக்கப்படவில்லை என மறுப்பறிக்கை கொடுத்திருக்கிறார்.
வாகனம் பறிக்கப்படவில்லை என்றால் நான் ஏன் நடந்தும், பைக்கிலும் வேலைக்கு செல்ல வேண்டும்?. இதற்கெல்லாம் முக்கிய காரணம் எஸ்.பி ஸ்டாலின் ஐ.பி.எஸ், சிறப்பு ஆய்வாளர் பாலச்சந்திரன். இந்த பாலச்சந்திரன் என்னை மட்டுமல்ல பல அதிகாரிகளை துன்புறுத்துகிறார்.
பணி செய்ய விடாமல் தடுக்கிறார். இதெல்லாம் காவல்துறையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும். என்னிடமிருந்து வாங்கிய வண்டி எஸ்கார்டுக்காககூட பயன்படுத்தப்படவே இல்லை. அது ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. 10-ம் தேதியிலிருந்து என்னிடம் வண்டி இல்லை. மாவட்ட எஸ்.பிக்கு 'என்னிடம் வண்டி இல்லை' என தெரிவித்தேன். அதற்குப் பிறகு எனக்கு ஓட்டவே முடியாத ஒரு வண்டி கொடுத்தார்கள். அந்த வண்டியை ஓட்டும் பொழுதெல்லாம் பயங்கரமாக புகை வந்து கொண்டு இருந்தது. அது சாலையில் ஓட்டுவதற்கு ஏற்ற வண்டியாகவே இல்லை.
என்னுடைய டிரைவர் கூட இந்த வண்டி ஓட்டவே முடியாது என மறுத்துவிட்டார். உங்களுக்கு வேண்டுமானால் என் உயிர் என்னுடைய வாகன ஓட்டுனருடைய உயிர் முக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களின் குடும்பத்தார்களுக்கு என்னுடைய உயிர் மிக முக்கியம். மறுநாள் வண்டியை கண்ட்ரோல் ரூமில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, 'ஓட்ட முடியாத வண்டி' என தகவல் அளித்து விட்டேன். ஆனால் எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
அதற்கு பிறகு பைக்கில் என்னுடைய கடமையை செய்வதற்காக புறப்பட்டு விட்டேன். இந்த செய்தி எல்லாம் ஏ.டி.ஜி.பி என்போர்ஸ்மென்ட் வரை தெரியும். ஒரு நாளுக்கு 150 கிமீ பைக்கில் பயணம் செய்து, எனக்கு முதுகு வலி வந்து விட்டது. இதை தெரிவித்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்குப் பின்னால் இரண்டு உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள் ஒன்று உளவுப் பிரிவைச் சேர்ந்த ஐஜி செந்தில் வேல் ஐபிஎஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன்.
ஆய்வாளர் பாலச்சந்திரன் மணல் கொள்ளை மதுவிலக்கு போன்ற நடவடிக்கையின் போது, ஆட்களிடம் எல்லாம் பணம் பறித்துக் கொண்டிருக்கிறார். நிறைய பேர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறார். அவர் நேர்மையற்ற அதிகாரி. அவர் தவறான தகவல்களை எஸ்.பி-க்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் சஸ்பெண்ட் ஆனாலும் பரவாயில்லை, மக்கள் விழிப்புணர்வோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த அரசை நெருக்கடிக்குள் கொண்டு வருவது உயர் அதிகாரிகள்தான்.
மதிப்பிற்குரிய முதல்வர் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்குவது இது போன்ற அதிகாரிகள் தான். எந்தப் புகாரையும் எங்கள் உயர் அதிகாரிகளிடத்திலே எங்களால் சொல்ல முடியாத அளவிற்கு நாங்கள் சிக்கலில் இருக்கிறோம். எங்களுக்கு பயம் இருக்கிறது.
ஐஜி செந்தில் வேலன் ஐபிஎஸ், டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், சிறப்பு ஆய்வாளர் பாலச்சந்திரன் இந்த நாலு பேரையும் நிக்க வைத்து கேள்வி கேட்க வேண்டும் இல்லையென்றால் இந்தக் காவல்துறை என்னவாகும் என எனக்கே தெரியாது" எனக் காட்டமாகப் பேசினார்.