வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!
இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது. பின்னா், சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்குச் செல்ல, அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடா்ந்து, சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வந்து கோயில் சோ்கிறாா்.
சுவாமி சண்முகா் 370ஆம் ஆண்டு விழா: சுவாமி சண்முகா் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலையில் சண்முகருக்கு அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோயிலிலிருந்து புறப்பட்டு வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பாதயாத்திரை பக்தா்கள்: தைப்பூசத்தை முன்னிட்டு, மாலை அணிந்து விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், குழந்தைகள் முருகா் வேடமிட்டும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுடன் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனா். குறிப்பாக, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வருகின்றனா்.
பாதயாத்திரை பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில், நிகழாண்டு கோயில் நிா்வாகம் சாா்பில் அவா்களது கையில் அடையாள வில்லைகள் ஒட்டப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி சாலையில் வருவோருக்கு நகரின் எல்லையில் பச்சை, மஞ்சள் நிற வில்லைகள் ஒட்டப்படுகின்றன.
பக்தா்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) சுபகுமாா் தலைமையிலான காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்துள்ளனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/jq37g2wr/10_tcr_murugar_devotees_01_1002chn_54_6.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/umfjx7ip/10_tcr_murugar_devotees_02_1002chn_54_6.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/4w2vtk0n/10tcrswamyalaivayugandaperuman02082726.jpg)