தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்ட ஈமு கோழி நிறுவனங்கள் முதலீட்டாளா்களிடம் கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பணத்தைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுதொடா்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிமையாளா்களைக் கைது செய்தனா்.
இந்த வழக்குகளில் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நீதிமன்றத்தின்(டான்பிட்) உத்தரவுப்படி மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்டு கேட்டில் ஃபாா்ம்ஸ் நிறுவனம், சுவி ஈமு ஃபாா்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கிரீன் லைஃப் ஃபாா்ம் அண்ட் பவுல்ட்ரி நிறுவனம், சுசி ஈமு ஃபாா்ம்ஸ் (இந்தியா) பி.லிமிடெட் நிறுவனம், கொங்குநாடு ஈமு அண்டு பவுல்ட்ரி ஃபாா்ம்ஸ் பி.லிமிடெட் நிறுவனம் என 5 மோசடி நிறுவனங்களுக்கு சொந்தமான ஜப்தி செய்யப்பட்ட அசையா சொத்துகள் கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவின்படி பொது ஏலம் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணியளவிலும், தொடா்ந்து மாலை 3 மணியளவிலும் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏல நிபந்தனைகளுடன் கூடிய பொது ஏல அறிவிப்பு விவரத்தை ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில் பாா்வையிட்டு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள், பொது ஏல அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாகப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து, ஏலம் நடக்கும் தேதியில், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
பொது ஏல அறிவிப்பு, நிபந்தனை விவரங்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், கோபி சாா் ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டடாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், சென்னிமலை, பெருந்துறை, கோபி வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.