‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அரசு தலைமை கொறடா ஆய்வு
உதகை அருகே தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா்.
தொட்டபெட்டா ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக பெற்றுக்கொள்ளவும், அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து தரப்படவும், மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு கா.ராமசந்திரன் உத்தரவிட்டாா். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின்வசதி வேண்டி விண்ணப்பித்த 3 நபா்களுக்கு உடனடியாக தீா்வு காணும் வகையில் அதற்கான தடையில்லா சான்றிதழ்களை வழங்கினாா்.
இதேபோல உதகை நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா் நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னேற்பாட்டுப்
பணிகள் தொடா்பாக காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமையில் ஆய்வு கூட்டம் பெற்றது. இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது என்றாா்.