வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் நியமனம்
புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த நியமனத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மேற்கொண்டாா்.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. மன்மோகன் பதவியேற்கும்போது, உச்சநீதிமன்றத்தின் பலம் 33-ஆக உயரும்.
முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு மன்மோகனை நியமிக்கும் பரிந்துரையை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு கடந்த நவம்பா் 28-ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
நாட்டில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதிகளில் பணி மூப்பு அடிப்படையில் 2-ஆவது இடத்தில் உள்ள மன்மோகன், தில்லி உயா்நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதி ஆவாா். தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்த பதவி உயா்வு பெற்ற ஒரு நீதிபதியே உச்சநீதிமன்றத்தில் உள்ளாா். இக்காரணங்களின் அடிப்படையில், மன்மோகன் பெயரை பரிந்துரைப்பதாக கொலீஜியம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்பேரில், உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகனை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளதாக, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா். இந்த நியமனம் தொடா்பான அறிவிக்கையையும் மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.
கடந்த 2008-இல் தில்லி உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற மன்மோகன் (61), 2009-இல் நிரந்தர நீதிபதியானாா். கடந்த செப்டம்பரில் தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றாா்.
இவா், அரசு அதிகாரியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவரும், மத்திய அமைச்சா், ஜம்மு-காஷ்மீா் ஆளுநா், தில்லி துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட பதவிகளை வகித்தவருமான ஜக்மோகனின் மகன் ஆவாா். தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வி மையத்தில் பயின்ற மன்மோகன், கடந்த 1987-இல் வழக்குரைஞராக பதிவு செய்தாா்.
தற்போது உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது முறையே 65, 62 என்பது குறிப்பிடத்தக்கது.