`உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்… உனக்குள்தானே நான் இருந்தேன்' - என்றும் மறவா ஜெயச்சந்திரன் ஹிட்ஸ்
`சாகா வரம் போல் சோகம் உண்டோ' என்ற வாக்கியம் கலைஞர்களிடத்தில் மட்டும், `சாகா வரம் போல் மகிழ்வேதும் உண்டோ' என மாறிவிடுகிறது.
கலைஞர்கள் மட்டும்தான் தாங்கள் மறைந்த பின்பும் தங்களின் கலைகளின் ஊடாக காலம் உள்ளவரை ஏதோவொரு தருணத்தில் மக்களால் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். எழுத்தாளர், ஓவியர், இசையமைப்பாளர் என இருக்கின்ற அத்தனை கலைகளிலும் சிறந்து விளங்கிய அத்தனைக் கலைஞர்களும் அந்த வகையே. ஏன், சாதி, மத பேதமில்லாத, வர்க்க ஏற்றத் தாழ்வில்லாத சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கப் போராடிய ஒவ்வொரு புரட்சியாளனும் வரலாற்றில் என்றும் வாழும் கலைஞனே...
அந்த வரிசையில், கடந்த 60 ஆண்டுகளாக இசை வழியே தனது தனித்துவ குரலால், வாழ்வின் வசந்த காலங்களில் உற்சாகப்படுத்திய, துயரங்களின்போது ஆற்றுப்படுத்திய, தூக்கம் தொலைந்த இரவுகளில் தாலாட்டிய மலையாளக் குரலோன் ஜெயச்சந்திரன், சாகா வரம் பெற்று காற்றின் மொழியாகியிருக்கிறார். 1944-ல் இசைக்குடும்பத்தில் பிறந்து ஆறு வயதிலேயே மிருதங்கம் பயிலத் தொடங்கிய ஜெயச்சந்திரன், தனது எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்களையும் பாடத் தொடங்கினார். 1958-ல் மாநில அளவில் பள்ளிச் சிறுவர்களுக்கான போட்டியில், சிறந்த பாடகராக யேசுதாஸ் பரிசு வென்ற அதேமேடையில், சிறந்த மிருதங்க கலைஞர் பரிசை வென்றார் ஜெயச்சந்திரன்.
1965-ல் இந்தியா பாகிஸ்தான் போர் நிதி நிகழ்ச்சியொன்றில் ஜெயச்சந்திரன் பாடுவதைக் கேட்ட மலையாள இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர்.எஸ்.பிரபு, குஞ்சாலி மரக்கார் என்ற படத்தில் பாட வைத்தனர். ஆனால், அதற்குப் பிறகு அவர் பாடல் பாடிய களித்தோழன் என்ற படம் அந்தப் படத்துக்கு முன் வெளியானது. தொடர்ச்சியாக மலையாளத்தில் பாடிவந்த ஜெயச்சந்திரன், எம்.எஸ்.வி இசையில் பணிதீராத வீடு என்ற மலையாளப் படத்தில் பாடிய ஒருபாடலுக்காக 1972-ல் கேரள அரசின் சிறந்த பாடகர் விருதை வென்றார்.
அதற்கடுத்த ஆண்டில், தமிழில் `அலைகள்' என்ற படத்தின் `பொன்னென்ன பூவென்ன பெண்ணே' என்ற பாடலின் வழி தமிழ் நெஞ்சங்களில் ஜெயச்சந்திரனின் குரலைப் பதியம்போட்டார் அதே எம்.எஸ்.வி. `வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்' என அலைவீசத் தொடங்கிய அந்தக் குரல் மெல்ல மெல்ல, யேசுதாஸ், எஸ்.பி.பி ஆகியோருக்கு நடுவில் தன்னையும் தமிழ் செவிகளால் கூர்ந்து ரசிக்கச் செய்தது. அப்படியே, ஏதோ வசீகர ரகசியமிருக்கும் இந்தக் குரலை `தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்' எனப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தார் இளையராஜா.
தொடர்ச்சியாக இளையராஜா இசையில் யேசுதாஸ், எஸ்.பி.பி சாயலில்லாமல் மனதை வருடியபடி, அடுத்த தலைமுறை ரஹ்மான், தேவா, எஸ்.ஏ ராஜ்குமார், ஜி.வி.பிரகாஷ் வரை ஒரு ரவுண்டு வந்த ஜெயச்சந்திரன், `ரேடியோ பெட்டி தொடங்கி ஸ்மார்போன்கள் வரை அனைத்திலும் என் பாடல் இல்லாமல் இரவுகளை நீங்கள் கடக்க முடியாது' என்று ரசிகர்களைக் கட்டிப்போட்டார். அப்படி இரவுகளைக் கட்டிப்போட்ட, மன இறுக்கங்களைத் தளர்த்தித் தாலாட்டிய ஜெயச்சந்திரனின் என்றும் மங்காத பாடல்களில் சிலவற்றைக் காணலாம்...
தாலாட்டுதே வானம் ( கடல் மீன்கள்)
கடலுக்கு அந்தப் பக்கமிருந்து சூரியன் உதிக்க, துயில் கலைந்தெழும் வேளையில் சூடான தேநீருக்குப் பதில், `தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம், தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம்' எனக் காலைப்பொழுதுக்கே புத்துணர்ச்சியூட்டிவிடுவார் ஜெயச்சந்திரன்.
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)
அப்படியே உற்சாகமாக விடிந்த பொழுதில், இன்றைக்காவது சொல்லிவிடலாம் என்று கிளம்பிய வேகத்தில் தயங்கும் தலைமகனின் காதலுக்கு, `மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், உன்னை விரும்பினேன் உயிரே' என்று துணைக்கு வரும் ஜெயச்சந்திரன், `உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும், இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?' என்று கேட்டுவிட்டு `வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம், கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்' என மொத்தத்தையும் இவரே பாட்டாகப் படித்துவிடுவார்.
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே (அம்மன் கோவில் கிழக்காலே)
அப்போதும் மனமிறங்காத காதலிக்கு, `பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே' என்று காதலியின் வரவை எதிர்பார்க்கும் குரலாகப் பாடி, `சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததே' அப்பெண்ணின் மனதையும் சேர்த்தே வெளிப்படுத்திவிடுவார்.
சொல்லாமலே யார் பார்த்தது (பூவே உனக்காக)
இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தும், `சொல்லாமலே... யார் பார்த்தது, நெஞ்சோடுதான்.. பூ பூத்தது' என மகிழ்ச்சியில் படத்தொடங்கி, `கண்ணே உன் முந்தானை காதல் வலையா, உன் பார்வை குற்றால சாரல் மழையா' எனக் காதலியின் ஒவ்வொரு அசைவையும் பிரமிப்பார்.
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)
எதிர்பாரா பிரிவொன்றில் காதலியைக் காணாத விழிகளில் வழியும் நீரைத்துடைக்க, `ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' எனப் பாட்டெடுக்கும் ஜெயச்சந்திரன், `அத்தை மகளோ மாமன் மகளோ, சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ, சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட' என நினைவுகளில் நனைந்து, `அம்மாடி நீதான் இல்லாத நானும், வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும்' என மயிலிறகாக இதயத்தை வருடிவிடுவார்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி (வைதேகி காத்திருந்தாள்)
மீண்டுமொருமுறை அவள் இல்லாத வெறுமையை உணரும் வேளையில், `காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி' எனும் வேதனைக் குரல், `நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற, நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற' என மேலும் வேதனையைக் கூட்ட, `உள்ளமும் புண்ணாச்சு காரணம் பெண்ணாச்சு' என மருந்து அவள் மட்டுமே என்பதை உணரவைத்துவிடும்.
ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்)
இப்படியே இருந்தால் எப்படி என மொத்த அன்பையும் மகள் மீது கொட்டும் தந்தையாக மாறும்போது, `ஒரு தெய்வம் தந்த பூவே... கண்ணில் தேடல் என்ன தாயே' எனும் அன்புக் குரலில், `வாழ்வு தொடங்கும் இடம் நீதானே... வானம் முடியுமிடம் நீதானே… காற்றைப் போல நீ வந்தாயே… சுவாசமாக நீ நின்றாயே... மார்பில் ஊறும் உயிரே…' எனத் தேற்றும் ஜெயச்சந்திரன், `மரணம் ஈன்ற ஜனனம் நீ' என மகளே வாழ்வென உருகிடுவார்.
கத்தாழங் காட்டு வழி (கிழக்குச் சீமையிலே)
மறுபக்கம், புகுந்தவீடு செல்லும் தங்கையின் மனதை, `கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி, வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே, வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா, வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா' என நன்கறிந்த அண்ணனாக, `வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு, பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு' என்று தன் பக்க வேதனையையும் பாடியிருப்பார்.
என் மேல் விழுந்த மழைத் துளியே (மே மாதம்)
இத்தனையிலிருந்தும் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைக்கையில், `மே மாதம்' கோடையில் தன் மேல் விழுந்த மழைத்துளியை, `என் மேல் விழுந்த மழைத் துளியே… இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' என வினாவோடு வரவேற்ற வறட்சி நீங்கிய இனிய குரலிடம், `என்னை மயக்கிய மெல்லிசையே… இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…' என்று இயற்கை எழுப்பும் கேள்விக்கு, `உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்… உனக்குள்தானே நான் இருந்தேன்' என்ற பதிலோடு அந்த இயற்கையிடமே திரும்பியிருக்கிறார் ஜெயச்சந்திரன்.
இவரின் இன்னும் எத்தனையோ பாடல்களை, பாடியது இவர்தான் என்று தெரியாமலே நாம் இளைப்பாறியிருக்கிறோம். இருந்தாலும், இசை என்றும் இவரை நினைவில் வைத்திருக்கும். காலம் உள்ள வரையிலும் காற்றின் மொழியாக கானம் பாடிக்கொண்டே இருப்பான் இந்தக் கலைஞன்!
ஜெயச்சந்திரன் குரலில் உங்களுக்குத் பிடித்த பாடலை கமெண்ட்டில் பதிவிடவும்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...