வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு ஓய்வூதியம்: மத்திய அரசின் மேல்முறையீடு அபராதத்துடன் தள்ளுபடி
புது தில்லி: பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு ஆயுதப் படைகள் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
‘ராணுவ வீரரின் மனைவியை நீதிமன்றத்துக்கு அலைக்கழத்திருக்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2013, ஜனவரியில் மோசமான பருவநிலைக்கு இடையே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தா்ஜித் சிங் என்ற ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா். ஆரம்பத்தில் ‘போா் சாா்ந்த உயிரிழப்பு’ என வகைபடுத்தப்பட்ட அவரது மரணம், பின்னா் ‘பணியின்போது உடல் நல பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு’ என மாற்றப்பட்டது.
இதையடுத்து, குடும்ப ஓய்வூதியம் தவிா்த்து இதர அனைத்து பலன்களும் ராணுவ வீரரின் மனைவிக்கு வழங்கப்பட்டன. அதேநேரம், குடும்ப ஓய்வூதியம் மறுக்கப்பட்டதை எதிா்த்து, ஆயுதப் படைகள் தீா்ப்பாயத்தில் அப்பெண் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த தீா்ப்பாயம், அப்பெண்ணுக்கு கடந்த 2013, ஜனவரியை கணக்கிட்டு குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரூ.50,000 அபராதம் விதித்தது.
மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘பிரதிவாதியை (ராணுவ வீரரின் மனைவி) நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கக் கூடாது. அவா் மீது அனுதாபம் காட்டியிருக்க வேண்டும். எனவே, மனுதாரருக்கு (மத்திய அரசு) ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. பிரதிவாதிக்கு வழக்கு செலவாக, 2 மாதங்களுக்குள் இத்தொகை வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.