உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை: சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரை விசாரணையின்றி சிறையில் அடைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தொடா்பாக விவாதிக்க வேண்டுமென அதிமுக கருத்துத் தெரிவித்தது. சட்டப்பேரவையில் இது தொடா்பான மசோதாவை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கள்ளச் சாராயக்காரா்கள், கணினி வெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்புக் காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் தடுப்புக் காவல் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி தடுப்புக் காவலில் வைக்கப்படுவா்.
சொத்துகள் பறிமுதல்: மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு எதிராகப்
பிறக்கப்பிக்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவானது, ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையாகக் கருதப்பட வேண்டும். மேலும், தடுப்புக் காவல் உத்தரவானது சம்பந்தப்பட்ட நபா் மீது பிறப்பிக்கப்படுவதுடன், அத்தகைய நபருக்கு எதிராக பொது அறிவிப்பு ஒன்றை பிறப்பித்து மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அமைந்துள்ள அவரது சொத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்யலாம். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும்போது அதைத் திருப்பிக் கொடுப்பதற்கான மனுவைத் தள்ளுபடி செய்யும் அதிகாரமும் அரசு அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
செந்தில்பாலாஜிக்கு பதில் ரகுபதி
மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் தொடா்பான சட்டத் திருத்த மசோதாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தாக்கல் செய்வாா் என சட்டப்பேரவையின் சனிக்கிழமை நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேள்வி நேரம் முடிந்ததும், நிகழ்ச்சி நிரல்படி மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்குப் பதிலாக சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தாா். அப்போது, பேரவையில் தனது இருக்கையிலேயே அமைச்சா் செந்தில்பாலாஜி அமா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.