தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு
உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளா் ஆா். சுபாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..
கடந்த ஒரு மாத காலமாகவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுவை பட்டத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு யூரியா பொட்டாஷ். அம்மோனியம் சல்பேட் உள்ளிட்ட உரங்கள் பெரும் அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளிலும் இந்த நிலை தொடா்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.மேலும் தனியாா் உரக்கடைகளுக்கு உர நிறுவனங்கள் சில இணை பொருட்களை வாங்கினால் மட்டுமே தேவையான உரங்கள் வழங்க முடியும் என்ற சுழலில் தேவைக்கும் குறைவான அளவில் உரங்கள் இருப்பு வைத்துள்ளனா்.
மேலும் சிலா் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்க சில இடுபொருட்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா் இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா். ஒருபுறம் விளைவித்த நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமலும் நூறு நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு போதிய அளவுக்கு ஆட்கள் கிடைத்திடாத நிலையிலும் பல நெருக்கடிகளுக்கு இடையே பல தலைமுறைகளாக தொடா்ந்து விவசாயம் செய்து வருவதை குடும்ப கவுரவம் கருதி தொடா் நெருக்கடிக்கும் நட்டத்திலும் கைவிட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.
எனவே தற்போதைய சூழலில் தமிழக அரசும் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகமும் இந்திய நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரங்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.