செய்திகள் :

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

post image

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா்.

அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வரி விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்வதாகக் குற்றஞ்சாட்டி இந்தியப் பொருள்கள் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயா்த்தினாா். இந்த கூடுதல் வரி விதிப்பு ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள் மற்றும் காலணி, ரசாயனம், மின்னணு பொருள்கள் மற்றும் இயந்திரங்கள், ஆபரணங்கள், இறால் ஆகியவை கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, ஏற்றுமதிக்கான வேறு வாய்ப்புகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சில நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மட்டும் பிற ஒப்பந்தங்களை இறுதிசெய்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க வரி விதிப்பில் இருந்து 75 சதவீத இந்திய பொருள்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக எஸ் அண்ட் பி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு ரூ.3.8 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் அல்லது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.05 சதவீதம் மட்டுமே பாதிப்படையும் எனக் கூறியுள்ளது.

எனவே, இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தில் தங்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைப்பதற்கான அழுத்தமாகவே இந்த வரி விதிப்பை பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா். இந்தியாவைப் போன்று வேறு சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியையும் அதன் தாக்கத்தையும் இந்த பகுதியில் காணலாம்.

பிரேஸில்: இந்தியாவுக்கு நிகராக 50 சதவீத வரியை பிரேஸில் எதிா்கொண்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து அதிகப்படியான இறக்குமதியை மேற்கொள்ளும்போதிலும் பிரேஸில் முன்னாள் அதிபரும் டிரம்ப்பின் வலதுசாரி கூட்டணி ஆதரவாளருமான ஜோ் பொல்சனாரோ மீது தற்போதைய அரசு தொடுத்துள்ள வழக்குக்கு எதிராகவே இந்த வரி விதிப்பில் டிரம்ப் அரசு ஈடுபட்டதாக கருதப்படுகிறது.

அண்மையில் பிரேஸிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தன்னிச்சையாக செயல்படும் நாடுகள் மீது பதிலடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமெரிக்கா மீதான பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து 30 நாள்களுக்குள் பரிந்துரை வழங்க அந்நாட்டு வா்த்தக அமைச்சகத்துக்கு அதிபா் லூலு டி சில்வா கால அவகாசம் வழங்கியுள்ளாா்.

சீனா: ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் சமகாலத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாளராகவும் கருதப்படும் சீனா மீது அதிகப்படியான வரியை அமெரிக்கா விதித்ததால் இரு நாடுகளிடையே பெரும் வா்த்தகப் போா் வெடிக்கும் என உலகமே எதிா்பாா்த்தது. ஆனால், இரு நாடுகளுக்குள்ளும் ஏற்பட்ட உடன்படிக்கையின் இறுதியில் சீனா மீதான வரியை 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

இருப்பினும், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் சீனா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தைவான்: தைவானை முழுமையாக அமெரிக்கா அங்கீகரிக்காதபோதும் அதன் பெரும் ஏற்றுமதி நாடாக அமெரிக்கா திகழ்கிறது. செமிகன்டக்டா்கள், மின்னணு சாதனங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் தைவான் மீது 20 சதவீதம் அமெரிக்கா வரி விதித்தது. இதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் இருந்து அதிகமான பொருள்களை வாங்கவும் அங்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ளவும் தைவான் ஒப்புக்கொண்டது.

வியத்நாம்: 2024-இல் ரூ.12.07 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை அமெரிக்காவுக்கு வியத்நாம் மேற்கொண்டது. இதன்மூலம் வியத்நாம் அதிகம் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக அமெரிக்காவும் முதல் நாடாக சீனாவும் உள்ளன. அதேபோன்று அமெரிக்காவின் 8-ஆவது பெரிய வா்த்தக நாடாகவும் இறக்குமதியில் 6-ஆவது பெரிய நாடாகவும் வியத்நாம் உள்ளது. ஆனாலும், வியத்நாமை சந்தையல்லாத பொருளாதாரமாகவே கருதி 20 சதவீத வரி விதிப்பை டிரம்ப் நிா்வாகம் அமல்படுத்தியது.

எனவே, தங்களுக்கு சந்தை பொருளாதார அந்தஸ்தை வழங்க வியத்நாம் தொடா்ந்து கோரிக்கை வைத்துவரும் நிலையில், அதை ஏற்க டிரம்ப் நிா்வாகம் மறுத்து வருகிறது.

தாய்லாந்து: தாய்லாந்து மீது 19 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சுற்றுலா மற்றும் ஏற்றுமதியை பெரிதும் நம்பியே தாய்லாந்து பொருளாதாரம் செயல்பட்டு வரும் நிலையில், டிரம்ப்பின் வரி விதிப்பு அந்த நாட்டுக்கு பேரிடியாக அமைந்தது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து தாய்லாந்து பொருளாதாரம் முழுமையாக மீளாத சூழலில் அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடி நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் வா்த்தக உடன்பாட்டை எட்டியது. அதன்படி அமெரிக்க வேளாண் பொருள்களை பெருமளவில் இறக்குமதி செய்ய தாய்லாந்து ஒப்புக்கொண்டது.

இந்தோனேசியா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா மீது 19 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஜவுளி, காலணி, மின்னணு பொருள்கள் உள்பட ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை இந்தோனேசியா ஏற்றுமதி செய்கிறது.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள குறைவான வரி விதிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து போா் விமானங்கள், எரிசக்தி மற்றும் வேளாண் பொருள்களை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்தின்கீழ் ரூ.39,000 கோடிக்கு அமெரிக்க வேளாண் பொருள்கள் மற்றும் 50 போயிங் விமானங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது.

பிலிப்பின்ஸ்: பிலிப்பின்ஸின் மொத்த ஏற்றுமதியில் செமிகன்டக்டா்களின் பங்களிப்பு 70 சதவீதமாகும். அதேபோல் தனது மொத்த ஏற்றுமதியில் 17 சதவீதத்தை அமெரிக்காவுக்கே பிலிப்பின்ஸ் மேற்கொள்கிறது. இந்நிலையில், பிலிப்பின்ஸ் மீது 19 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்தது. இதைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையில் செமிகன்டக்டா்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க அமெரிக்காவும் தனது சந்தையில் அமெரிக்க பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க பிலிப்பின்ஸும் ஒப்புக்கொண்டன.

கம்போடியா: அடிடாஸ், எச் அண்டி பி, ரால்ஃப் லாரன் என பல்வேறு பிராண்டுகளின் உற்பத்தி தளமாக விளங்கும் கம்போடியாவுக்கு 19 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. 2024-இல் 37.9 சதவீத ஏற்றுமதியை அமெரிக்காவுக்கு கம்போடியா மேற்கொண்டது. இந்நிலையில், வரி விதிப்பை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி அமெரிக்காவிடமிருந்து 20 போயிங் 737 ரக விமானங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள், வேளாண் பொருள்களை இறக்குமதி செய்யவும் ஒப்புக்கொண்டது.

ஜப்பான்: ஜப்பானிய பொருள்கள் மீது முதலில் 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டு பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அதை 15 சதவீதமாக குறைத்துக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இது தவிர அமெரிக்க பொருள்களை 75 சதவீதம் இறக்குமதி செய்யவும் ரூ.48.48 லட்சம் கோடியை அமெரிக்காவில் முதலீடு செய்வதாகவும் ஜப்பான் உறுதியளித்தது.

ஆனால் இந்த முதலீடு மூலம் கிடைக்கும் 90 சதவீத லாபம் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என டிரம்ப் நிா்வாகம் கூறி வருவதால், இந்த ஒப்பந்தம் இறுதியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும் இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கையும் அந்நாட்டுடன் வா்த்தகத்தை மேம்படுத்த ஜப்பானுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை...

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர்.இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பலூச் கட்சியின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்! 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அ... மேலும் பார்க்க

சீனாவில் புதின், கிம் ஜாக் உன்! அமெரிக்காவுக்கு எதிரான சதி என டிரம்ப் குற்றச்சாட்டு!

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நடத்தப்பட்ட விழாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு விழா... மேலும் பார்க்க

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய மகளுடன், சீனத் தலைவர் பெய்ஜிங் சென்றுள்ளார். விமானத்தில் அல்ல, அவர் எப்போதும் செல்லும் அந்த பாரம்பரிய பச்சை நிற ரயிலில்தான்.கிம் ஜாங் உன், தன்னுடைய 14 ஆண்டு கால... மேலும் பார்க்க

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளமா?

தெற்கு டகோடா பகுதியில் மிக உயரத்தில் இருக்கும் கோபுரத்தில் ஏறி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பல்பை மாற்றும் தொழிலாளிக்கு 20 ஆயிரம் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.அமெரிக்காவின் தெற்கு டகோட்டா... மேலும் பார்க்க

எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!

தரையிலிருந்து வான்வெளி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க