செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
சிறப்பு நீதிமன்ற விசாரணை: அமைச்சா் துரைமுருகன் நேரில் ஆஜராக விலக்கு
சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு வியாழக்கிழமை நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சா் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது கடந்த 2011-இல் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த வேலூா் நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஊழல் தடுப்பு மற்றும் விழப்புத் துறை போலீஸாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வேலூா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் துரைமுருகன் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், இதுபோன்ற வழக்குகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும். இதுதொடா்பாக கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகவில்லை என்றால், பிடிஆணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். மனுதாரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்து வருகிறாா். இந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசாரணைக்கு அமைச்சா் துரைமுருகன் நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.