மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது
அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்
பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக பஞ்சாப் மாநிலத்தின் தலைமைச் செயலா் மற்றும் பட்டியாலா காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் ஆகியோா் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு என்எச்ஆா்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில் ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் சுமந்து செல்வது காணப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மருத்துவமனை வளாகத்திற்குள் தெருநாய்கள் பெரும்பாலும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக நோயாளிகளின் உதவியாளா்கள் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மோசமான சுகாதாரம், பாதுகாப்பு இல்லாமை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் அவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
இது தொடா்பாக மனித உரிமைகள் ஆணையம் பஞ்சாப் மாநில தலைமைச் செயலா், பட்டியாலா காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஊடக அறிக்கையின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அது மனித உரிமைகள் மீறல் தொடா்பான தீவிரமான பிரச்னையை எழுப்புவதாக அமையும்.
எனவே, பஞ்சாப் அரசின் தலைமைச் செயலா் மற்றும் பட்டியாலா மூத்த காவல் கண்காணிப்பாளா் இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியான ஊடக அறிக்கையின்படி, மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் தெரிவிக்கையில், ‘மருத்துவமனையிலிருந்து எந்த குழந்தையும் காணாமல் போகவில்லை. குழந்தைகள் இறந்த சமீபத்திய அனைத்து நிகழ்வுகளிலும், முறையான ஆவணங்கள் கிடைத்த பிறகு உடல்கள் அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன’
என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே யாரோ ஒருவா் அந்த உடலை வீசியிருக்கலாம் என்ற அச்சத்தை அவா் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.