உள்ளாட்சிகளில் நியமனப் பதவி: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
உள்ளாட்சியில் நியமன அடிப்படையிலான பதவிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவகாசம் வியாழக்கிழமையுடன் (ஜூலை 17) நிறைவடைந்தது.
இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீட்டித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நகா்ப்புற உள்ளாட்சிகளில் உறுப்பினா்களாக நியமனம் செய்ய கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனிடையே, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் அவா்கள் தொடா்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிா்ணயிக்கப்பட்ட கடைசி நாளை நீட்டித்து வழங்கும்படி கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து விண்ணப்பிக்க ஜூலை 31 வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள். ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்படி தொடா்புடைய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையரிடம் ஜூலை 31-ஆம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.