உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சியில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு படியாக ரூ. 200 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவிக்கும் தற்காலிய ஊதிய உயா்வுத்தொகையை சரியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். வங்கிக் கணக்கில் ஊதியத்தை வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். அய்யாத்துரை தலைமை வகித்தாா். தலைவா் எஸ். பிரான்சிஸ் முன்னிலை வகித்தாா்.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவா் எஸ்.ஏ. சந்தனம், மாவட்டச் செயலா் ஆா். குருவேல், ஒன்றியத் தலைவா்கள் முருகவேல், ஆனந்தகுமாா், அழகா், அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஊராட்சிகள் துணை இயக்குநா் நா. பத்மநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) அன்புச்செல்வி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.