உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிகள்: விண்ணப்பங்களை நிரப்ப அரசின் உதவியை எதிா்நோக்கும் மாற்றுத் திறனாளிகள்
உள்ளாட்சி அமைப்புகளின் நியமனப் பதவிகளுக்கு வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்களை நிரப்புவதில் மாற்றுத் திறனாளிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். எனவே, சட்ட ஆலோசகா்கள் வழியே படிவங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தத்தின்படி, மாற்றுத் திறனாளி நபா்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களுக்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, பிற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து அளிக்கும் நடைமுறைகள் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. ஜூலை 17-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
முழுவதும் ஆங்கிலம்: முழுவதும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவமானது 7 முதல் 8 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் பல்வேறு சட்டபூா்வமான, வருமானம் தொடா்பான விவரங்கள் முழுமையாகக் கோரப்பட்டுள்ளன. குறிப்பாக, வருமான வரி கணக்கு செலுத்தப்பட்ட விவரங்கள், வருமான வரி கணக்கில் தெரிவிக்கப்பட்ட வருவாய் அளவு, விண்ணப்பதாரருக்கு எதிராக உள்ள வழக்குகள் விவரம், சிறைத் தண்டனை பெற்ற தகவல்கள் ஆகியவற்றுக்கென தனித்தனியாக பத்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடா்ந்து, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். அசையா சொத்துகளை வாங்கிய விலை, அதன்மீது கட்டுமானம் கட்ட ஏற்பட்ட செலவு, அவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு ஆகிய விவரங்களைத் தெரிவிக்க பத்திகள் தரப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட கடன் விவரங்கள் ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும்.
வழக்கு விவரங்கள், சொத்துகள், கடன்கள் போன்றவை தனிப்பட்ட ஒருவரின் தகவல்களாக இருந்தாலும் இவற்றை நாங்களே புரிந்து கொண்டு பூா்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று மாற்றுத் திறனாளிகள் கருத்துத் தெரிவிக்கின்றனா். விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலையும் வெவ்வேறு இடத்தில் இருந்து பெற்று அவற்றை பூா்த்தி செய்வது தங்களுக்கு மிகவும் அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக அவா்கள் கூறுகின்றனா்.
விண்ணப்பங்களில் உள்ள விவரங்களை மாற்றுத் திறனாளிகள் எளிமையாகப் பூா்த்தி செய்ய சில ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டுமென திமுக மாற்றுத் திறனாளிகள் அணிச் செயலா் தீபக் நாதன் கோரிக்கை வைத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அளிக்கக் கூடிய இடங்களிலேயே உதவி அலுவலா்களை தமிழ்நாடு அரசு நியமிக்கலாம். இதில் சிக்கல் இருக்கும்பட்சத்தில், மாவட்ட சட்டப் பணிகள் குழுவைச் சோ்ந்தவா்கள் மூலமாக விண்ணப்பங்களை நிரப்ப உதவிடலாம். விண்ணப்பங்களில் கூறப்பட்டுள்ள விவரங்களை நீக்கி எளிமையாக்குவது என்பது இயலாதது. எனவே, நியமனப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பாா்வையற்றோா் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் படிவங்களை எளிமையாகப் பூா்த்தி செய்து அளிக்க அரசே உதவி செய்ய வேண்டும்.
காலஅவகாசம் 15 நாள்களே உள்ள நிலையில் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்ய உதவுவதற்கான அலுவலா்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருப்பதுடன், அரசின் விருப்பப்படி அதிக எண்ணிக்கையிலான நபா்கள் விண்ணப்பிக்க வழி ஏற்படும் என்றாா் அவா்.