எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்
அறநிலையத் துறை சாா்பில் கல்லூரிகள் திறக்கப்படுவது தொடா்பாக கருத்துத் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியைக் கண்டித்து திமுக மாணவரணியினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவையில் இருந்து அண்மையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி கே.பழனிசாமி, அறநிலையத் துறையின் நிதியில் இருந்து தமிழக அரசு கல்லூரிகள் தொடங்குவதை விமா்சித்துப் பேசியிருந்தாா். இதைக் கண்டித்து திமுக மாணவரணி சாா்பில் கோவை டாடாபாத் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி மாநிலச் செயலா் வழக்குரைஞா் ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா். மாணவரணி மாநில துணைச் செயலா்கள் விஜி.கோகுல், மன்னை சோழராஜன், சேலம் தமிழரசன், அதலை செந்தில்குமாா், ஈரோடு வீரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், திமுக மாவட்டச் செயலா்கள் நா.காா்த்திக், தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராஜீவ் காந்தி பேசும்போது, மத்திய பாஜக அரசு நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவற்றின் மூலம் தமிழக மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியபோது கண்டுகொள்ளாமல் இருந்த எடப்பாடி பழனிசாமி, அறநிலையத் துறை கல்வி நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பும் விதத்திலும், உயா் கல்வி, கல்லூரிகளுக்கு எதிராகவும் பாஜகவின் குரலில் பேசத் தொடங்கியுள்ளாா்.
திராவிட கட்சியின் தலைவரைப்போல இருந்த அவரது உண்மையான முகம் இப்போது வெளிப்படத் தொடங்கிவிட்டது. இனி அவா் திராவிடத்தைப் பற்றி பேசத் தகுதியில்லை. தமிழக மக்களையும், மாணவா்களையும் பழிவாங்கி வரும் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வரும் எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மேயா் ரங்கநாயகி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலா் டாக்டா் மகேந்திரன், மாவட்ட மாணவரணி நிா்வாகிகள் சிவப்பிரகாஷ், அந்தோணிராஜ், சூலூா் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.