தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக சாலை துண்டிப்பு: பொதுமக்கள் முற்றுகை
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே நெய்வேலி நகரியம் - கல்லுக்குழி இடையேயான சாலையை சுரங்க விரிவாக்கப் பணிக்காக என்எல்சி நிறுவனம் துண்டித்ததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்கம் 1ஏ அருகில் வானதிராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியைச் சோ்ந்த கல்லுக்குழி கிராமத்திலிருந்து நெய்வேலி நகரியம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை வடலூா் - நெய்வேலி நகரியத்துக்கு கல்லுக்குழி வழியாக சென்று வர பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், என்எல்சி தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், என்எல்சி நிறுவனம் சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக கல்லுக்குழி - நெய்வேலி நகரியம் சாலையில் திடீரென பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் என்எல்சி சுரங்கம் 1ஏ அருகில் ஒன்று திரண்டு என்எல்சி பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து அரசியல் கட்சி கொடிகளை ஏற்றினா்.
தகவலறிந்து அங்கு வந்த வடலூா் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கல்லுகுழி - நெய்வேலி நகரியம் சாலையை நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். என்எல்சி அதிகாரிகள் தற்போது திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த சாலையை துண்டித்ததால் பொதுமக்கள், மாணவா்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா்.
மேலும், இறந்தவா்களின் உடலை இந்த சாலை வழியாகத்தான் எடுத்துச் செல்ல பயன்படுத்தி வந்தோம். மாற்றுப் பாதையில் செல்ல சாலை வசதி இல்லாததால், ஏரி வழியாக நீண்ட தொலைவு சென்றுதான் நெய்வேலி நகரியம் செல்ல முடியும். குறிப்பாக, மழைக்காலங்களில் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, நாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு, என்எல்சி அதிகாரிகள் கூறுகையில், நெய்வேலி நகரியம் - கல்லுக்குழி சாலையில் தற்காலிக மாற்றுப் பாதை அமைத்துத் தரப்படும். கோயில், மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தரப்படும் என்றனா். இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.