தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா
`என் புருஷனை இனியும் விட்டு வைக்கக்கூடாது’ - மனைவி செய்த கொடூரம்; காதலனுடன் சிக்கியது எப்படி?
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி நாயனசெருவு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயன் (30). இவரின் மனைவி வெண்ணிலா (25). இவர்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூக்கத்திலேயே இறந்துவிட்டதாகக் கூறி மறுநாள் காலை உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு கதறி அழுதார் வெண்ணிலா. வீட்டு முன்பு குவிந்த உறவினர்கள் விஜயன் மரணத்தில் சந்தேகம் இருப்பதை உணர்ந்தனர்.
`உடலை பிரேத பரிசோதனை செய்தாக வேண்டும்’ எனக்கூறி திம்மாம்பேட்டை போலீஸாருக்கும் தகவல் தெரியப்படுத்தினர். விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து `சந்தேக மரணம்’ என்ற அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடக்கத்திலேயே மனைவி வெண்ணிலாவின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் அன்று கைக்குழந்தையுடன் வெண்ணிலா கதறி அழுது நாடகமாடியதை சிலர் நம்பியதால், உடனடியாக அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவராமல் போலீஸார் விட்டுப்பிடிக்க காத்திருந்தனர்.

செல்போன் அழைப்பு - ஆய்வு
இந்த நிலையில், பிணக்கூறாய்வு அறிக்கையும் வந்தது. அதில், `இறப்புக்கு முன்பு விஜயன் மது அருந்தியிருக்கிறார். மூச்சுத்திணறல் காரணமாகத்தான் அவரின் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இயற்கை மரணம் கிடையாது’ எனப் பிணக்கூறாய்வில் சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து, `கொலை’ என்கிற முடிவுக்கு வந்த போலீஸார், விஜயன் மனைவி வெண்ணிலா பயன்படுத்திய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
அதில், குறிப்பிட்ட ஒரு எண்ணுக்கு மட்டும் பலமுறை அழைப்புகள் சென்றிருப்பதும், அந்த எண்ணில் இருந்து மீண்டும் வெண்ணிலாவுக்கு அழைப்புகள் வந்திருப்பதும் தெரியவந்தது. விஜயன் இறந்த அன்று இரவும்கூட நீண்ட நேரம் அந்த செல்போன் எண்ணுக்குத் தொடர்புக்கொண்டு விடிய, விடிய வெண்ணிலா உரையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜயன் இறந்து 3 மாதங்களுக்குப் பிறகு மனைவி வெண்ணிலாவை நேற்று கைது செய்து போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், `விஜயன் கொலைதான் செய்யப்பட்டார்’ என்பதை ஒப்புக்கொண்டார். கொலை நிகழ்த்தப்பட்ட விதம், அதன் பின்னணியும்கூட அதிர வைத்திருக்கிறது.
இது குறித்துப் பேசுகிற போலீஸார், ``கூலி வேலைக்குச் செல்லும் விஜயன் தினமும் இரவு மது குடித்துவிட்டு தலைக்கேறிய போதையில் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால், விஜயன் மீது வெண்ணிலா வெறுப்படைந்திருக்கிறார். இந்த நிலையில்தான் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) என்கிற இளைஞனுடன் வெண்ணிலாவுக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. வெண்ணிலாவை விட சஞ்சய் 5 வயது இளையவன். இருந்தாலும் இருவரும் திருமணம் மீறிய நெருக்கமான உறவில் அடிக்கடி ஈடுபட்டுவந்திருக்கின்றனர். இவர்களின் ரகசிய தொடர்பு நாளடைவில் கணவன் விஜயனுக்குத் தெரியவந்திருக்கிறது. அக்கம், பக்கத்தினரும் தவறாக பேசத் தொடங்கினர்.
ஆத்திரமடைந்த விஜயன் மனைவியை ஒழுங்காக இருக்கம்படி கண்டித்திருக்கிறார். ஆனாலும், `கணவரை விட சஞ்சய்தான் முக்கியம்’ எனக் கருதிய வெண்ணிலா, அவருடனான தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்து ரகசியமாக பேசிவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக் கிடைத்து சஞ்சய் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

தனது காதலன் தன்னை விட்டு வெகுதூரம் சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத வெண்ணிலா, மிகுந்த வருத்தத்துக்குள்ளாகியிருக்கிறார். `நமது உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் என் புருஷன் விஜயனை இனியும் விட்டு வைக்கக்கூடாது’ என சிங்கப்பூரில் உள்ள காதலனிடம் போன் மூலம் சொல்லியிருக்கிறார் வெண்ணிலா. சஞ்சயும் கொலைத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு, சிங்கப்பூரில் இருந்தபடியே அதை செயல்படுத்தவும் வழிகாட்டினான். அதன்படி, மார்ச் 17-ம் தேதி இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கியிருக்கிறார் விஜயன்.
நள்ளிரவில் அவர் ஆழ்ந்த உரக்கத்தில் இருந்த சமயம் பார்த்து, சஞ்சய் மூலம் ஏவப்பட்ட அவன் நண்பர்கள் 5 பேர் வெண்ணிலாவின் வீட்டுக்குச் சென்றனர். வெண்ணிலா நொடிக்கு நொடி சஞ்சய்க்கு தகவல் கொடுத்துவிட்டு, கும்பலின் வருகைக்காக காத்திருந்தார். நள்ளிரவு நேரம் ஆனது. கதவைத் திறந்துவிட்டதும், உள்ளே புகுந்த 5 பேரும், மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த விஜயனின் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு இறுக கட்டிப்போட்டனர். பிறகு தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சைத் திணறடித்து கொலை செய்தனர்.
3 மாதங்களுக்குப் பிறகு..!
விஜயனின் கதை முடிந்ததை உறுதி செய்துகொண்ட கொலையாளிகள் அங்கிருந்து சாவகாசமாக புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். இரவு முழுவதும் கணவனின் சடலம் முன்பு அமர்ந்திருந்தபடியே, சிங்கப்பூரில் உள்ள தனது காதலன் சஞ்சயிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் வெண்ணிலா. விடிந்த பிறகு கணவரை எழுப்புதைபோல நாடமாடிவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து நின்றுக்கொண்டும் கதறி அழுது ஊரையே அழைத்திருக்கிறார். `குடிபோதையில் தூங்கியபோது, அப்படியே இறந்துவிட்டார்’ என திரும்பத் திரும்பச் சொல்லி ஊரையே நம்ப வைக்க முயன்றிருக்கிறார். உடலில் காயம் ஏதும் இல்லாததால், யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. பிரேத அறிக்கை முடிவு தெரிந்த பிறகு, செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வெண்ணிலாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த நாயனசெருவு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (23), நந்தகுமார் (19), நாட்றம்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அழகிரி (19) மற்றும் மேலும் 2 சிறுவர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்திருக்கிறோம்.

சிங்கப்பூரில் இருந்து திட்டம் வகுத்து கொடுத்த காதலன் சஞ்சய் வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறான். அங்கிருந்து அவனை தமிழகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான சட்ட நடைமுறைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். தமிழகம் திரும்பியவுடன் சஞ்சயும் கைது செய்யப்படுவான்’’ என்கின்றனர் போலீஸார். 3 மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் ஏற்பட்ட திருப்பம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் கிளப்பியிருக்கிறது.