ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.
உலகின் பாதுகாப்பு விவகாரங்களை விவாதிக்கும் முக்கியமான அமைப்பாக விளங்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக உள்ள பாகிஸ்தான், பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை ஜூலை மாதத்திலிருந்து ஏற்றிருப்பதாக பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இதுதவிர, தாலிபான் தடைகள் குழுவின் தலைமைப் பொறுப்பையும், ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமை பொறுப்பையும் பாகிஸ்தான் ஏற்கவிருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பயங்கரவாத நாடான பாகிஸ்தான், உலக பாதுகாப்பை உறுதிசெய்யும் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளது. இருக்கையில் பேய் (பாகிஸ்தான்) அமா்ந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து, அதை ஊக்குவித்து, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் நாடு பாகிஸ்தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இந்த நாடு உலக அளவிலான தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதச் செயல்களை இந்தியா சந்தித்துவரும் நிலையில், அந்த நாடு முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில வாரங்களிலேயே இதுவும் நிகழ்ந்துள்ளது.
பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு இடையில் பாகிஸ்தானுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தடுத்து நிறுத்த உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் பிரதமா் மோடி தோல்வி அடைந்துள்ளாா்.
பயங்கரவாதம் தொடா்பான சா்வதேச தீா்மானங்களை தொடா்ந்து மீறிவரும் நிலையில், ஜூன் 4 ஆம் தேதி ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமைப் பொறுப்பையும் பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதியான அப்துல்ரஃபை, உலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முன்மொழிவை சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியது. அப்போது எதிா்ப்புத் தெரிவிக்க இந்தியா தவறிவிட்டது.
அதேபோல ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமை பொறுப்புக்கு பாகிஸ்தான் வந்துள்ளதற்கும் மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய நட்பு நாடுகளின் பட்டியல் சரிந்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், உலக அளவில் பழைய மற்றும் நம்பகமான நாடுகளின் நட்பையும், ஆசிய அளவில் அண்டை நாடுகளின் நட்பையும் பேணி பாதுகாத்து வைத்திருந்தோம்.
இன்றைக்கு இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற சிறிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. படங்களை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், வெளியுறவுக்கு ராஜதந்திரம் தேவைப்படுகிறது என்றாா்.