கடலில் தவறி விழுந்து மீனவர் பலி!
புதுச்சேரி: காரைக்காலில் மீன் பிடிக்கச் சென்றபோது 19 வயது மீனவர் கடலில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் இன்று(மே 5) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு கரை திரும்பியபோது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகில் இருந்த மீனவர் சைந்தவன் தவறி விழுந்து மாயமானார்.
இதனை அடுத்து மாயமான மீனவர் சைந்தவனை பல இடங்களிலும் மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மாயமான மீனவரை தேடிய நிலையில் திடீரென்று அவரது உடல் உயிரிழந்த நிலையில் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய மீனவரை கண்ட சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது உடலைக் கண்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் நிலைய போலீஸார் உயிரிழந்த மீனவர் சைந்தவன் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.