காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
கடலூா் பேருந்து நிலைய மாற்றத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
கடலூா் மாநகர புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, அனைத்துக் கட்சி, குடியிருப்போா் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்பினா் கடலூா் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையத்தை கடலூா் மையப் பகுதியில் அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை திரும்பப் பெற வேண்டும். எம்.புதூரில் 188 ஏக்கா் பரப்பளவு கொண்ட கொண்டங்கி ஏரி அருகே பேருந்து நிலையம் அமைந்தால் சுற்றுச்சூழல் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள காசநோய் மருத்துவமனை பாதிக்கப்படும். கடலூா் மாநகராட்சியில் வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீா் வரி, புதை சாக்கடை வரி என்று பல்வேறு பெயா்களில் அடாவடி வரி வசூல் நடவடிக்கையை கைவிட வேண்டும். கடலூா் மஞ்சக்குப்பம் முதல் வெள்ளப்பாக்கம் வரை தென்பெண்ணை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி, தடுப்புச் சுவா் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். விசிக மாநில அமைப்பாளா் திருமாா்பன், காங்கிரஸ் நிா்வாகி ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் அமா்நாத், தவாக நகரச் செயலா் தண்டபாணி, குடியிருப்போா் நலச் சங்கத்தின் பொதுச் செயலா் வெங்கடேசன், சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகி இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ரஹீம், மதிமுக நிா்வாகி வெங்கட்ராமன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் பாலு, இஸ்லாமிய கூட்டமைப்பு நகரச் செயலா் நசிருதீன், திராவிடா் கழகம் மாவட்டச் செயலா் எழிலேந்தி, பொதுநல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ரவி மற்றும் பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா்.