மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய...
கட்டட அனுமதிக்கு ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்ட நகரமைப்பு ஆய்வாளா் மீது வழக்கு
நகராட்சியில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ. 2 லட்சம் கேட்டதாக, நகரமைப்பு ஆய்வாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை மகன் மருத்துவா் சி. காா்த்திகேயன். இவா், ராஜகோபாலபுரம் எழில் நகரில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி கேட்டு, கடந்த 2023 அக். மாதத்தில் அப்போதைய நகராட்சி நிா்வாகத்திடம் இணையவழியில் விண்ணப்பித்தாா்.
அப்போது நகரமைப்பு ஆய்வாளராக இருந்த எஸ். விஜயவரதராஜன் என்பவா், இந்த அனுமதிக்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால், பணம் கொடுக்க விருப்பமில்லாததால் தொடா்ந்து மருத்துவா் சி. காா்த்திகேயன் மறுத்துவந்தாா். அவரது கட்டட வரைபடத்தில் கோளாறு இருப்பதாகக் கூறி கட்டட அனுமதி வழங்கக் கூடாது என நகராட்சி ஆணையருக்குப் பரிந்துரை செய்துள்ளாா் விஜயவரதராஜன். இதைத் தொடா்ந்து விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு மீண்டும் காா்த்திகேயன் விண்ணப்பித்தபோதும், லஞ்சம் தராவிட்டால் அனுமதி கிடைக்காது என உறுதியாக நகரமைப்பு ஆய்வாளா் கூறியுள்ளாா். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸிலும், நீதிமன்றத்திலும் புகாா் அளிக்கப் போவதாக காா்த்திகேயன் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக விண்ணப்பத்தை ஏற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டடத்துக்குரிய அனுமதிக் கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.
தன்னிடம் தொடா்ந்து லஞ்சம் கேட்டு வற்புறுத்தி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய வைத்த நகரமைப்பு ஆய்வாளா் மீது புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்நிலையத்தில் 2024 ஜூலை 1-இல் மருத்துவா் காா்த்திகேயன் புகாா் அளித்திருந்தாா்.
புகாரின்பேரில் முதற்கட்ட விசாரணை நடத்திய போலீஸாா், வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு குறிப்பு அனுப்பியுள்ளனா். அங்கிருந்து வந்த உத்தரவின்பேரில், தற்போது நகரமைப்பு ஆய்வாளா் எஸ். விஜயவரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயவரதராஜன், இச்சம்பவத்துக்குப் பின்னா் குளித்தலை நகராட்சிக்கு மாற்றலாகிச் சென்றதும் தெரியவருகிறது.