தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
கட்டட மேஸ்திரிக்கு கத்திக் குத்து: தனியாா் வாகன ஓட்டுநா் கைது
மன்னாா்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கட்டட மேஸ்திரியை கத்தியால் குத்திய தனியாா் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மஞ்சனவாடி சிட்டுக்கன்னு மகன் அறிவழகன் (40), கட்டட மேஸ்திரி, மன்னப்பன்தெருவில் வசித்து வருகிறாா். இவருடைய மைத்துனா் மணக்கரை பாலு (35), மனைவி, குழந்தைகள் உள்ளனா். பானையூா் கீழ்சேத்தி தனியாா் வாகன ஓட்டுநா் ஞானசேகரன்(40), மனைவி கோமதி.
அறிவழகனிடம் பாலு, கோமதி கட்டுமானத் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்ததால் இருவருக்கும் தவறான உறவு ஏற்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனா்.
கோட்டூா் காவல்நிலையத்தில், கோமதியை பாலு கடத்தி சென்றுவிட்டதாக ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்தனா்.
இந்நிலையில், மன்னாா்குடி தற்காலிக பேருந்துநிலையம் அருகே அறிவழகனை சந்தித்த ஞானசேகரன் தனது மனைவி கோமதி இருக்கும் இடம் தெரிந்தும் மறைப்பது ஏன் என செவ்வாய்க்கிழமை கேட்டதால் பிரச்னை தொடங்கியது. இருவரும் சமாதானம் ஆகி பெரியகடைவீதியில் உள்ள மதுக்கடையில் ஒன்றாக மதுக்குடித்துக் கொண்டிருந்தபோது,திடீரென அறிவழகனின் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஞாசேகரன் ஓடியுள்ளாா்.
துரத்திக்கொண்டு வந்த அறிவழகன், மேலராஜவீதி பள்ளிவாசல் அருகே ஞானசேகரனை வழிமறித்து கைப்பேசியை கைப்பற்றிய போது, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதில், ஞானசேகரன் மறைத்துவைத்திருந்த கத்தியால் அறிவழகனை வயிற்றில் பலமுறை குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.
இதில், காயமடைந்த அறிவழகன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ஞானசேகரனை கைது செய்தனா்.