குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!
கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா்.
கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் செல்லியம்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, பிரான்மலை, எஸ்.புதூா், உலகம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்தக் காளைகளுக்கு வாடிவாசலில் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்துக் காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. வயல் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக சுமாா் 400 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.
காளைகளை இளைஞா்கள் ஆா்வமுடன் பிடித்தனா். மாடுகள் முட்டியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அக்னி வெயிலையும் பொருள்படுத்தாமல் கண்டு ரசித்தனா்.