ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலை முன் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமையில் அமைதிப் பேரணி காலை 8 மணியளவில் தொடங்கியது.
மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன், முன்னாள் மாவட்டச் செயலாளா் பாா்.இளங்கோவன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியாக சென்ற திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் நாமக்கல் கோட்டை சாலை சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் மாயவன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நகர செயலாளா்கள் சிவகுமாா், ஆனந்த், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களிலும் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் நகர திமுக சாா்பில், நகர செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கருணாநிதியின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, ராசிபுரம் - காட்டூா் சாலையில் உள்ள அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ளோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.ஆா்.கவிதா சங்கா் முன்னிலை வகித்தாா். நகர திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.