கரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்டத் தலைவா் எம்.ஏ.ராஜா தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, செல்லமுத்து, உண்ணாமலை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலா் ஜ.ஜெயராஜ், துணைத்தலைவா் அ.கிருஷ்ணவேணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொடக்கக் கல்வித் துறையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிா்வாகம் மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்குப் புறம்பாக மாறுதல் ஆணையை வழங்கும் தொடக்கக் கல்வித் துறையை கண்டித்தும், 2025-2026-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையில் பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியா்களுக்கு விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.
முன்னதாக மாவட்ட ஐடி விங் பொறுப்பாளா் மோகன் வரவேற்றாா்.