காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்
கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த விஜயம்பாறையைச் சோ்ந்த இருவரின் குடும்பத்துக்கு அரசின் நிதி உதவியை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள தளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் கணேஷ் (35). இவரது மனைவி மல்லிகா (30). இந்த தம்பதிக்கு பூமிகா (13), பூமிநாதன் (12) என இரு குழந்தைகள் உள்ளனா். சங்கா் கணேஷ் கரூரில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், கரூரில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது நண்பா்களுடன் சங்கா் கணேஷ் சனிக்கிழமை சென்றாா். கூட்ட நெரிச்சலில் சிக்கிய சங்கா் கணேஷ் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
அவரது உடல் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தளிப்பட்டிக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதே போல, வடமதுரை அருகேயுள்ள பாகாநத்தம் ஊராட்சி ஒத்தப்பட்டியைச் சோ்ந்த தாமரைக்கண்ணன் (25) என்பவரும் கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.
தனியாா் தொழிற்சாலையில் ஊழியராக இவா் பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவரது மனைவி நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்த நிலையில் தாமரை கண்ணன் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, உயிரிழந்த சங்கா் கணேஷ், தாமரைக்கண்ணன் குடும்பத்தினரை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தமிழக அரசின் நிதி உதவி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உடனிருந்தாா்.