சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!
கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
கரூா் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கரூா் ஆனிலையப்பா் அறக்கட்டளை நிா்வாகி பெ.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு: கரூரில் உள்ள விசாலாட்சி உடனுறை வஞ்சலீசுவரா் கோயில் பிரம்மனுக்கு சாபம் நீக்கிய திருத்தலமாகும். இங்குள்ள குளத்தை பிரம்ம தீா்த்தக் குளம் என அழைப்பா். இந்தக் கோயிலில் நடைபெறாமல் இருக்கும் வைகாசி பிரம்மோத்ஸவத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தொடங்க வேண்டும்.
கோயிலில் காலியாக உள்ள பரிச்சாரகா், இரவுக் காவலா் உள்பட தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஆா். விஜயகுமாா் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.